தங்கத்தாய் நீயென்று!
August 11, 2012
உயிர்போகும் வலிபொறுத்து கருவாய் எனைவளர்த்து
உயிர்த்தாயே என்னுயிர் தாயே!
முழுப்பொழுதும் என்நினைவாய் உன்னையே மறந்தஉன்
முகம்தான் என்முதல் முகவரியம்மா!
எதிர்பாசம் எதிர்பாராமல் உன்பாசம் உரித்தாக்கி
எல்லாமும் செய்தாய் எனக்காக!
கரம்பிடித்து நடைபழகி செவிசாய்த்து மொழிகற்று
கணம்கூடப் பிரியவில்லை உன்னை!
கல்தடுக்கிக் விழுந்து கண்ணீருடன் முன்னின்றால்
கல்நோகும் காலைவிட அதிகமாய்!
விளையாடப் போகையிலே வான்மழை நனைத்தபோது
வருணனையே கொஞ்சம் வஞ்சித்தாய்!
கேட்டதெல்லாம் கைரேகை தொட்டுவிடச் செய்தாய்
கேட்காமலே இதைமட்டும் ஏன்செய்தாய்?
மேன்மேலும் சுமைதாங்க முடியாதென்று எண்ணிதான்
மேற்படிக்க விடுதியில் சேர்த்தாயோ?
கலங்கிய கண்ணிருக்கே கவலை யடைந்தவள்
கண்மூடிய கண்ணீரைப் பார்த்தும்,
காற்றாடிக் கையசைத்துச் சென்றதாய் உணர்ந்தேனே
காணாமல் போனேனோ உன்மனதில்?
இதற்கெல்லாம் விடைகாண விடும்நாளில் வீடுசேர
இளைப்பாறி வெகுநாளானது போல்வந்தாய்!
இன்பமாய் இங்கிருந்தாயென எண்ணியே இருந்தஎனக்கு
இதைக்கண்டு பேச்சில்லை சிலநேரம்!
என்கண்ணில் தேங்கிய கண்ணீர்தான் அன்றுநன்றாய்
உன்கண்ணை மறைத்தது என்றும்
உணர்ந்து கொண்டேன் தங்கத்தாய் நீயென்று
ஊட்டிவிட்ட சோற்றின் சுவையில்!